×

தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை

சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராக பணியாற்றிய கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர் பணியிடங்களுக்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இதில் கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5ன் படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். ஆனால், கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. எனவே, விதிகளுக்கு முரணாக அவர் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், கிரிஜா வைத்தியநாதனுக்கும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிரிஜா வைத்தியநாதன் தமிழக தலைமை ெசயலாளராகவும், சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அதன் அடிப்படையில் அவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.

இதை ஏற்க மறுத்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பசுமை தீர்ப்பாய சட்டப்படி தேவையான சுற்றுச்சூழல் சார்ந்த பணி அனுபவம் அவருக்கு இல்லை. எனவே அவரது நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் கிரிஜா வைத்தியநாதன் உரிய பதில் தருமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். வரும் 19ம் தேதி கிரிஜா வைத்தியநாதன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக பதவி ஏற்க தயாரான நிலையில் உயர் நீதிமன்றம் அவரது பணி நியமனத்திற்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chief Secretary ,Kirija Vaithiyanathan ,National Green Tribunal , Kirija Vaithiyanathan
× RELATED சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி...